சமூக வலைதள விமர்சனத்தை தடுக்கும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சமூக வலைதளங்களில் வெளியிடப் படும் விமர்சனங்கள், கருத்துகளை குற்றமாகக் கருதும் தகவல் தொழில் நுட்ப சட்டப்பிரிவு 66ஏ சட்ட விரோதமானது எனக் கூறி, அதை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. எனினும், இணை யதளங்களை முடக்கும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பக்கங் களில் கருத்துகள், விமர்சனங்கள் வெளியிடுவோரை கைது செய்து சிறையில் அடைக்க, தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ வழி வகுக்கிறது. இப்பிரிவின் படி, புனேயைச் சேர்ந்த இளம்பெண்கள் ஷாஹீன் தாதா, ரினு சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சிவசேனா கட்சியின் நிறுவனர் தலைவர் பால்தாக்கரே மறைந்த போது நடத்தப்பட்ட வேலைநிறுத்தத்தை விமர்சனம் செய்து வலைதளங்களில் கருத்து தெரிவித்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று ஏர் இந்தியா விமான ஊழியர்கள் போராட்டத்தின்போது, பிரதமர் அலுவலகத்தை விமர்சித்து கருத்து வெளியிட்ட ஊழியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சட்ட மாணவி ஷ்ரேயா சிங்கால் என்பவர் சட்டப்பிரிவு 66ஏ-வை ரத்து செய்யக் கோரி கடந்த 2012-ல் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து இதே கருத்தை வலியுறுத்தி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், ரோஹின்டன் ஃபாலி நரிமன் அடங்கிய அமர்வு நேற்று அளித்த தீர்ப்பு விவரம்:
தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ-ன்படி, வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிடுவோரை கைது செய்ய போலீஸாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் அதிக அளவில் தவறாக பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. இப்பிரிவு தவறாக பயன்படுத்தப்பட மாட்டாது என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது.
இப்போதுள்ள அரசு அளிக்கும் உத்தரவாதம் அடுத்துவரும் அரசை கட்டுப்படுத்தாது. எனவே, இப்பிரிவுக்கு சட்ட அங்கீகாரம் உள்ளதா என்பதை ஆராய வேண்டி யுள்ளது. மேலும், இப்பிரிவு ஜனநாயகத்தின் அடிப்படை தூண்களான தனிமனித சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை ஆகியவற்றுக்கு எதிராக அமைந்துள்ளது. இச்சட்டப்பிரிவில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் தெளிவற்றதாக உள்ளன. எனவே, இச்சட்டப்பிரிவு சட்ட விரோதமானது என்று அறிவித்து ரத்து செய்கிறோம்.
அதேநேரம் பிரிவு 69பி-ன்படி, மத உணர்வுகளை தூண்டுதல், நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வெளிநாட்டு உறவுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும் இணையதளங்களை முடக்கும் மத்திய அரசின் அதிகாரத்தை அனுமதிக்கிறோம். அதன் கீழ் தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உரிமை உண்டு. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
66ஏ என்ன சொல்கிறது?
இந்தியாவில் சுதந்திரமாக கருத்துகளை தெரிவிக்கவும், வெளியிடவும் பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2000-வது ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66ஏ மற்றும் அதில் 2009-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சுதந்திரமாக கருத்துகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிறரை எரிச்சலூட்டும் வார்த்தைகள், அச்சுறுத்தல், ஏளனம், புண்படுத்துதல், பகை உணர்வைத் தூண்டுதல் போன்ற கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவோரை கைது செய்யலாம் என்று அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும். தற்போது இச்சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதையடுத்து, வலைதள கருத்து சுதந்திரம் மீட்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

common for php config location code

Off Page SEO

How to Crack FaceBook Social TooLkit & Use Premium Tools for Free