hard work
கடுமையாக உழைக்காதே, திறமையாக உழை
நாம் குளிக்கும் பொழுது ஒரு பெரிய Mug மூலம் தண்ணீரை மொண்டு குளிப்போம். ஒருவேளை நான் எதையும் கஷ்டப்பட்டு தான் செய்வேன். என்று சொல்லி, ஸ்பூனால் தண்ணீரை மொண்டு அதில் குளித்தால், அதுபோல் செய்வது எவ்ளவு பெரிய பைத்தியக்காரத்தனம்?
முதலில் அதுபோல் யாராவது செய்வார்களா? கண்டிப்பாக செய்ய மாட்டார்கள். ஆனால் ரொம்ப சுலபமாக முடிக்க வேண்டிய ஒரு வேலையை, கஷ்டப்பட்டு செய்கிறேன் என்று சொல்லி, சிலர் செய்வது என்பது, ஸ்பூனால் தண்ணீரை மொண்டு குளிக்கும் முட்டாள்தனத்துக்கு ஒப்பானது தான்.
திறமையாக உழைத்து ஜெயிப்பதில் [Smart Work] விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ஆகச்சிறந்த உதாரணம் என்று சொல்லலாம்.
எடிசன் என்றவுடன் அவர் எலெக்ட்ரிக் பல்ப் கண்டு பிடித்தார், மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல கண்டு பிடிப்புகளை கண்டு பிடித்தார் என்பது நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் பலருக்கு தெரியாத ஒரு உண்மை எடிசன்க்கும் முன்பே ஒரு விஞ்ஞானி எலெக்ட்ரிக் பல்பை கண்டு பிடித்து விட்டார். அவர் இங்கிலாந்து விஞ்ஞானியான ஜோசப் ஸ்வான்.
ஜோசப் ஸ்வான் எடிசனை விட 19 வயது மூத்தவர். இந்த பதிவில் கொடுத்துள்ள இரண்டு பேர் படங்களில் ஒருவர் எடிசன் என்பதை சிலர் பார்த்தவுடன் சொல்லாமலே கண்டு பிடித்து இருப்பீர்கள். அதற்கு பக்கத்தில் பெரிய வெள்ளை தாடியோடு ஒருவர் இருக்கிறாரே அவர் தான் ஜோசப் ஸ்வான்.
ஜோசப் ஸ்வான் 1850 ம் ஆண்டு முதல், அதாவது 1850 தில் எடிசன் 3 வயது குழந்தை. 1850 தில் ஜோசப் ஸ்வான்க்கு 22 வயது.
1850 ம் ஆண்டு முதல் ஜோசப் ஸ்வான் எலெக்ட்ரிக் பல்பிற்காக கடுமையாக உழைத்து 1878 தில் வெற்றிகரமாக பல்பை கண்டு பிடித்து பொதுமக்கள் பார்வைக்கு மின்சார விளக்கை வைத்தார்.
ஆனால் எடிசன் 1870 ம் ஆண்டு அதாவது தனது 20 வது வயதில் எலெக்ட்ரிக் பல்ப் குறித்த ஆய்வுகளை செய்து 1879 தில் தனது ஆயிரம் தோல்விகளுக்கு பிறகு எடிசன் வெற்றி பெற்றார்.
எடிசனின் அமெரிக்காவிற்கும், ஜோசப் ஸ்வானின் இங்கிலாந்திற்குமான தூரம் சுமார் 6500 கிலோமீட்டருக்கும் மேல். அக்காலத்தில் வெறும் ஒரு ஆண்டு இடைவேளையில் ஜோசப் ஸ்வானின் இந்த கண்டு பிடிப்பு எடிசனுக்கோ அல்லது எடிசனின் இந்த கண்டு பிடிப்பு ஜோசப் ஸ்வானுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. எடிசன் தான் கண்டு பிடித்த பல்புக்கு காப்புரிமை வாங்கலாம் என்று முயற்சித்த பொழுது, இப்படி ஒரு கண்டு பிடிப்பிற்கு ஏற்கனவே ஒருவர் இங்கிலாந்தில் காப்புரிமை வாங்கி வைத்திருக்கிறார் என்று கிடைத்த தகவலால் எடிசன் பல்பு வாங்கினார்.
திருநெல்வேலிக்கே அல்வா என்பதை போல் பல்பை கண்டு பிடித்த எடிசனுக்கே பல்பா என்பதை போல் அவர் நிலைமை ஆனது. அதன்பின்னர் எடிசன் துளிகூட தாமதிக்காமல் உடனடியாக இங்கிலாந்து பயணம் செய்தார். ஜோசப் ஸ்வானை சந்தித்தார். சந்தித்த பின்னர் எடிசனுக்கு காத்திருந்த இன்னொரு அதிர்ச்சி. எடிசன் பல்பிற்கு கொடுத்த வடிவமும், ஜோசப் பல்பிற்கு கொடுத்த வடிவமும் இரண்டுமே ஒன்று தான்.
ஜோசப்பை பார்த்த உடன் எடிசன். நான் தான் தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்க விஞ்ஞானி
உடனே ஜோசப் ஸ்வான். அப்படியா சரி இருந்துட்டு போ. நான் தான் ஜோசப் ஸ்வான், இங்கிலாந்து விஞ்ஞானி. அதுசரி தம்பி என்ன விஷயமா என்னை பார்க்க வந்திருக்கீங்க.
எடிசன்- ஜோசப் சார், ஜோசப் சார் நான் 1970 முதல் 1979 வரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக பாடுபட்டு, கஷ்டப்பட்டு, தூக்கப்பட்டு, துயரப்பட்டு எலெக்ட்ரிக் பல்பை கண்டு பிடித்து இருக்கேன். ஆனால் எனக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே நீங்க எலக்ட்ரிக் பல்பை கண்டு பிடிச்சி அதுக்கு இங்கிலாந்தில் பேடன்ட்டும் வாங்கிட்டிங்க னு கேள்விப்பட்டேன். அதனால?
ஜோசப் சற்று கோபமாக என்ன அதனால? அப்படி பார்த்தால் நான் 1850 துலேந்து முயற்சி பண்ணி உன்னை விட பல ஆயிரம் தோல்விகளை சந்திச்சு . நான் உன்னை விட கஷ்டப்பட்டு, தூக்கப்பட்டு, துயரப்பட்டு இந்த பல்பை கண்டு பிடிச்சிருக்கேன். அப்படி கண்டு பிடிச்ச என்னோட கண்டுபிடிப்புக்கு என்ன மேன் மரியாதை?
எடிசன்- ஜோசப் சார், ஜோசப் சார் நான் அதைதான் சொல்ல வந்தேன். உங்க கண்டு பிடிப்பை நானோ அல்லது என் கண்டுபிடிப்பை நீங்களோ திருடல. நம்ப 2 பேரும் ஒரே மாதிரி சிந்தித்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறோம். கிட்டத்தட்ட 30 வருடங்களாக கஷ்டப்பட்டு நீங்க சாதிச்ச ஒரு விஷயத்தை நான் 10 வருடங்களில் சாதிச்சு இருக்கேன். அதுக்காக நான் உங்களை விட பெரிய விஞ்ஞானி, அறிவாளி னு லாம் சொல்ல வரல. நான் சொல்ல வரது என்னனா ஒரு விஞ்ஞானியை பத்தி இன்னொரு விஞ்ஞானியால தான் புரிஞ்சிக்க முடியும். உங்களை நான் புரிஞ்சிண்டேன். உங்களை நான் மதிக்கிறேன். அதே மாதிரி நீங்களும் என்னை கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க. நான் என்ன சொல்ல வரேன்ன்னு கேளுங்க.
ஜோசப் தனது நீண்ட தாடியை தடவி விட்டவாறே. சரி, சரி சொல்லு
எடிசன்- நம்ப 2 பேரும் சேர்ந்து பார்ட்னர் ஷிப் ல பல்பு விற்பனை செய்வோம். அதில் வரும் லாபத்தில் 50 சதவீதம் உங்களுக்கு, 50 சதவீதம் எனக்கு. டீலா, நோ டீலா என்று எடிசன் கேட்க ஜோசப் சற்று யோசித்து விட்டு சரி டீல் என்று சொல்லி பச்சை கொடியை காட்டிய பின்னர் 1883 இல்
Edison & Swan United Electric Light Company [Ediswan ] எனும் கம்பெனி உதயமாகி பல்பு விற்பனை வெகு ஜோராக நடந்து அதனால் கிடைத்த லாபத்தின் பங்கை எடிசன், ஸ்வான் இருவரும் சமமாகவே அனுபவித்தார்கள். ஆனால் வரலாற்றில் இருவருக்கும் சமமான இடம் கிடைத்ததா, சமமான புகழ் கிடைத்ததா? எடிசன் என்றால் கிட்டத்தட்ட படித்தவர்கள் அனைவருக்குமே தெரியும். ஆனால் ஜோசப் ஸ்வான் எனும் பெயரை இந்த பதிவை படிப்பதற்கு முன் எத்தனை பேருக்கு தெரியும்?
அதற்கு காரணம் என்ன?
1] எடிசன் பல்பை கண்டு பிடித்தவுடன் அமெரிக்காவின் பல இடங்களில் எலெக்ட்ரிக் பல்பால் தெருக்களை அலங்காரம் செய்தார். அந்த புகைப்படங்கள் லாம் அன்றைய புகழ்பெற்ற பல பத்திரிகைகளில் வருமாறு செய்தார். அதுவரை எலெக்ட்ரிக் பல்ப் என்றால் என்ன என்று கேள்வியே படாதவர்கள், புதிதாக அதுபோன்ற ஒரு விஷயத்தை, அத்தகைய ஒரு வெளிச்சத்தை முதல்முறையாக பார்க்கும் மக்களுக்கு எடிசனின் இந்த ஸ்மார்ட் ஒர்க் எத்தகைய ஒரு பிரும்மாண்டத்தை கொடுத்திருக்கும்?
2) அவர் ஆயிரம் முறை தனது எலெக்ட்ரிக் பல்ப் எக்ஸ்பெரிமெண்ட்டில் தோல்வி அடைந்த பொழுது அப்ப உருவான பல்பின் பல்வேறு வடிவங்களை எக்சிபிஷன் போல் அடிக்கடி வைத்து, அந்த மாதிரிகளை வைத்து பல்வேறு ஸ்மார்ட் ஒர்க்களை அவர் செய்தார். இவை எல்லாம் அவர் செய்ததன் ஒரே ஒரு காரணம், நாளைய வரலாறு எலெக்ட்ரிக் பல்பு என்றால் இந்த எடிசன் பெயரை மட்டும் சொல்ல வேண்டும் எனும் அந்த ஒற்றை நோக்கம் மட்டும் தான்.
3] நான் எலெக்ட்ரிக் பல்பை கண்டு பிடிப்பதில் ஆயிரம் முறை தோற்றேன் என்பதை சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் பல்லலாயிரம் முறை பதிவு செய்தார்.
4) தனது புகழ் உலகின் அணைத்து பகுதிகளுக்கும் பரவ வேண்டும் என்பதற்காக அக்காலத்திலேயே பல பர்சனல் PRO க்களை அதற்கு என்று மாத சம்பளம் கொடுத்து நியமித்தார்.
ஆமாம் எடிசன் ஒரு புகழ் விரும்பி தான். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. புகழை நீங்கள் விரும்பினால் தான் புகழும் உங்களை விரும்பும் என்பது தான் யதார்த்தம். நாம் புகழின் பின்னால் செல்லாமல் இருந்தால் புகழ் நம் பின்னால் வரும் என்பது இக்காலத்துக்கு மட்டுமல்ல, எக்காலத்துக்கும் உதவாத பைத்தியக்காரதனமான ஒரு வெத்து தத்துவம்.
நீங்க வீட்டில் வளர்க்கும் ஒரு நாய்க்குட்டி, பூனைக்குட்டியாக இருந்தால் கூட, அதன்மீது நீங்கள் அன்பை காட்டவில்லை என்றால் அது பதிலுக்கு உங்கள் மீது அன்பு காட்டாது. அப்படி இருக்கையில் புகழ் பின் செல்லாதவர்களின் பின்னால் தான் புகழ் வரும். நீ புகழை வெறுத்தால், புகழ் உன்னை விரும்பும். இதுபோல் வெத்துவேட்டு தத்துவம் பேசுபவர்கள் லாம் மிக, மிக ஆபத்தானவர்கள்.
புகழையும், பணத்தையும் நிறைய அடைய வேண்டும் என்று விரும்புங்கள், அதை அதிமாக நேசியுங்கள். நேர்மையான வழியில் நாம் எவ்ளவு பணம், புகழ் சம்பாதித்தாலும் அதில் தவறே கிடையாது.
எடிசன் மற்றும் ஜோசப் ஸ்வான் ஆகிய 2 விஞ்ஞானிகள் வாழ்வில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் இது தான்.
நீ புகழை விரும்பினால் தான் புகழும் உன்னை விரும்பும்
நீ பணத்தை விரும்பினால் தான் பணமும் உன்னை விரும்பும்.
புகழை நேசி, பணத்தை நேசி. அதை நேர்வழியில் அதிகமாக பெறுவது எப்படி என்று யோசி
உங்கள் வாழ்வில் புகழ் பூத்து குலுங்கட்டும், செல்வம் பெருகட்டும், மகிழ்ச்சி பொங்கட்டும்.
Comments
Post a Comment